Showing posts with label ஆடுகள் தொடாத இலை. Show all posts
Showing posts with label ஆடுகள் தொடாத இலை. Show all posts

Wednesday, April 2, 2014

ஆடுகள் தொடாத இலை


கற்ப மூலிகை ஆடாதோடை/ஆடாதோடா/Adhatoda zeylanica
மக்கள் ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப மூலிகைகள்.
ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என அழைக்கப்படுகிறது. சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் வளரும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும். தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் மூலிகையாகும். எந்தவகையான மண்ணாக இருந்தாலும் இந்த ஆடாதோடை செழித்து வளரும் தன்மை கொண்டது. கிராமப்புற மக்களும் சரி, அங்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்களும் சரி, ஆடாதோடை இலையை அதிகம் பயன்படுத்துவார்கள்.
மனிதனை அன்றாடம் துரத்தும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது அருமருந்தாகும். இது அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால் இதனை ஆயுள் மூலிகை என்றும் அழைக்கின்றனர். மனித உடலில் நுரையீரல் முக்கிய உறுப்பாகும். இது சுவாசக் காற்றை உள்வாங்கி அதிலுள்ள பிராணவாயுவைப் பிரித்து எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. நுரையீரல் நன்கு செயல் பட்டால்தான் இரத்தம் சுத்தமடையும். இதனால் நீண்ட ஆயுளும் கிடைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நுரையீரலைப் பலப்படுத்த ஆடாதோடை சிறந்த மருந்தாக உள்ளது. இது நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள அசடுகளை (சளி) நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் இதை மரணமாற்று மூலிகை என்றும் கூறுகின்றனர். இதன் வேர், பட்டை, பூ, இலை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது. .
நெஞ்சில் சளி, அதனுடன் வலி, உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள். இது சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. அதுபோல் தடுக்கி விழுந்து மார்புப்பகுதியில் அடிபட்டால் உடனே முதலுதவியாக ஆடாதோடை இலை ஒன்றுடன் வெற்றிலை 2 சேர்த்து மென்று தின்னக் கொடுப்பார்கள். இது உடனடி நிவாரணமாகும்.
நீண்ட நாள் தொடந்த சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாகும். இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.
இவைகளுடன் திப்பிலி, ஏலம், அதிமதுரம், தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க இருமல், இளைப்பு, சுரம் தீரும். இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு(ஆஸ்த்துமா) தீரும்.
இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக் கொடுக்க இருமல் தீரும். இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.
ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும். ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்து தினமும் காலை வேளையில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல், இரைப்பு நீங்கும். நெஞ்சுச் சளியைப் போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும். இதில் பச்சயம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச்சளி, இருமல் போன்றவற்றை உடனே மாற்றும். குத்து இருமல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.
மேற்கண்ட முறைப்படி 1 மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு எப்போதுமே சளித் தொல்லை உண்டாகாது.