Showing posts with label சாப்பிட்டதும் தேநீர் அருந்தலாமா?. Show all posts
Showing posts with label சாப்பிட்டதும் தேநீர் அருந்தலாமா?. Show all posts

Saturday, February 1, 2014

சாப்பிட்டதும் தேநீர் அருந்தலாமா?

 ஒருவர் நலமாக இருப்பதற்கு உணவு, உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள் என ஆயிரம் காரணங்கள் கூறினாலும், அனைத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது நம்முடைய உணவுப் பழக்கம்தான். சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா? சாப்பிட்டவுடன் பழங்கள் சாப்பிடுவது சரியா? என நம் மனதில் பல்வேறு கேள்விகள் எழும். உணவு உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி, ஊட்டச் சத்து நிபுணர் திவ்யா கிருஷ்ணமூர்த்தி மிகத் தெளிவாக விளக்கினார். நம்முடைய உடலின் ஒவ்வொரு உறுப்பும் இயங்கத் தேவையான ஆற்றல் மற்றும் ஆக்ஸிஜனை ரத்தம் கொண்டு செல்கிறது. உணவு உட்கொண்டதும் இரைப்பையின் செயல்பாடு அதிகரித்து, மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. இதனாலேயே உணவு உட்கொண்டதும் ஒருவித மந்த நிலை ஏற்படுகிறது. சாப்பிட்டதும் தேநீர் அருந்தலாமா? 'கூடாது. ஏனெனில், தேயிலையில் சில அமிலங்கள் உள்ளன. இது, புரதச் சத்தையும் (Hardening), செரிமானத்தையும் கடினமாக்கி விடுவதற்கான வாய்ப்பு அதிகம். சாப்பிட்டு அரை முதல் ஒரு மணி நேரம் கழித்து தேநீர் அருந்தலாம்.' சாப்பிட்டதும் சிகரெட் பிடிப்பது தவறா? 'சிகரெட் பிடிப்பதே ஆரோக்கியமானது அல்ல. சாதாரணமாக ஒரு சிகரெட் பிடித்தால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுமோ, அதைக் காட்டிலும் 10 மடங்கு பாதிப்பு, சாப்பிட்டதும் சிகரெட் பிடிக்கும்போது ஏற்படும். எனவே, சிகரெட் பிடிப்பதை முற்றிலும் நிறுத்த முடியாவிட்டாலும், சாப்பிட்டதும் சிகரெட் பிடிப்பதையாவது நிறுத்த வேண்டும்.' சாப்பிடும்போது குளிர்ந்த நீர் அருந்தலாமா? 'உணவு உட்கொண்டதும், குளிர்ந்த நீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயம், சிறுநீரகம் போன்றவை பாதிப்படைய அதிக வாய்ப்பு உண்டு. மேலும், நெஞ்சு எரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்சிதைவு போன்றவை ஏற்படக் கூடும். சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய், ரத்த நாளங்களில் தங்கி அடைப்பை உண்டாக்கிவிடும். குறிப்பாக, மாரடைப்பு போன்ற இதய நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளவர்கள், சாப்பிடும்போது குளிர்ந்த நீரைப் பருகவே கூடாது. வெதுவெதுப்பான நீர் அருந்துவது, செரிமானத் திறனை மேம்படுத்தும்.' சாப்பிட்டதும் குளிக்கலாமா? 'கூடாது. குளிக்கும்போது கை, கால், உடல் பாகங்களில் ரத்த ஓட்டம் அதிக அளவில் இருக்கும். இதனால், இரைப்பைக்கும் செரிமானத்துக்கும் தேவையான ரத்த ஓட்டம் குறைந்து விடும். இதனால், உணவு செரிமான மண்டல உறுப்புகள் பாதிப்படையும்.' சாப்பாட்டின்போது அல்லது சாப்பிட்டு முடித்ததும் பழங்கள் சாப்பிடலாமா? 'உணவுக்கு இடையில் அல்லது முடித்தவுடன் பழங்கள் எடுத்துக் கொள்ள கூடாது. அப்படி எடுத்துக் கொண்டால், வயிற்றுக்குள் உப்புசம் (Bloated with air) ஏற்படும். எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்போ அல்லது பின்போதான் பழங்களைச் சாப்பிட வேண்டும். இப்படி இடைவெளி விட்டுச் சாப்பிடும்போது செரிமானத் திறன் மேம்படும்' சாப்பிட்டதும் தூங்கலாமா? 'மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே தூங்கச் செல்லக்கூடாது. உணவுக்குப் பின் குறைந்தது அரைமணி நேரம் கழிந்த பிறகே தூங்க செல்லவேண்டும்.' சாப்பிட்டதும் உடற்பயிற்சி, நடைப் பயிற்சி செய்யலாமா? 'சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது அல்ல. நடந்தால், செரிமான உறுப்புகளுக்குச் செல்லக் கூடிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, கால்களுக்குச் செல்லும். உணவில் உள்ள சத்துகள் முழுமையாக ரத்தத்தில் கலப்பதற்கு இடையூறாக இருக்கும். இதனால், உணவு சரியாக செரிமானம் ஆகாமல், சத்துக்கள் அனைத்தும் வீணாகும். சாப்பிட்டவுடன் சிறிது நேரம் சும்மாவே இருப்பதுதான் பெஸ்ட்.'