Friday, December 6, 2013

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்க்கு சித்த மருத்துவம் கூறும் எளிய மருத்துவ முறைகள்:

''ஆவாரை, கொன்றை, நாவல், கடலழிஞ்சில், கோரைக்கிழங்கு, கோஷ்டம், மருதம்பட்டை இவற்றை ஒரே அளவில் சேர்த்து அத்துடன் எட்டுப் பங்கு நீரையும் சேர்த்து, எட்டில் ஒரு பங்கு ஆகும்படி காய்ச்சி அருந்த சர்க்கரை நோய் நீங்கும்;
ஆவாரையின் இலை, பூ, காய், பட்டை, வேர், பிசின் முதலியவற்றில் ஆன்தோசயனின், டானின், ஃபீனால்கள் உள்ளதால் இவை சர்க்கரை நோயைப் போக்குவதில் சிறப்பாகச் செயல்படுகின்றன.

தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் ஐந்து நாவல் பழங்களைச் சாப்பிட வேண்டும். நாவல் பழத்தில் உள்ள ஆன்தோசயனின் மிகச் சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகச் செயல்பட்டு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். சர்க்கரை நோயினால் ரத்தக் குழாய்கள், கண்களின் விழித்திரை மற்றும் உடலின் அடிப்படைச் சவ்வுகளில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும்.

நாவல் கொட்டைப் பொடியை 200 மி.கி. அளவு இரு வேளைகளும் உண்ண வேண்டும். இதில் உள்ள கிளைகோஸைடு ஜம்போலின் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.

பாகற்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். பாகற்காயில் உள்ள பாலிபெப்டைடு தாவர இன்சுலினாகச் செயல்படுகிறது. பாகற்காயில் உள்ள சாரன்டின், குளுகோஸை செல்கள் உபயோகிப்பதை ஊக்குவிக்கிறது.

வெந்தயம் ஒரு டீஸ்பூன் இரவில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். இதில் உள்ள ஹைட்ராக்ஸிலூஸின் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது.

ஆலமரத்தின் அனைத்துப் பாகங்களும் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். ஆலம்பட்டையை இடித்து 10 மடங்கு நீரில் ஊறவைத்து, வடித்து, அருந்த சர்க்கரைநோய் கட்டுப்படும்.

கருங்காலி மரப்பட்டை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை சம அளவு எடுத்து நீர் சேர்த்து எட்டில் ஒரு பங்காக ஆகும் வரை காய்ச்சி அருந்தலாம்.

சிறுகுறிஞ்சான் இலைப் பொடியை 500 மி.கி. இரு வேளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள ஜிம்னெமிக் அமிலம் சிறுகுடலில் உறிஞ்சப்படும் குளுகோஸின் அளவைக் குறைப்பது மட்டும் அல்லாமல் இன்சுலின் சுரப்பையும் அதிகரிக்கும்.

என்ன சாப்பிடலாம்?
இஞ்சி, வெங்காயம், பூண்டு, அவரைப் பிஞ்சு, பீன்ஸ், சோயாபீன்ஸ், சிவப்பு பீன்ஸ், வாழைத் தண்டு, வாழைப் பிஞ்சு, முழுத் தானியங்கள், ஓட்ஸ், சிகப்பரிசி, பச்சைக் காய்கறிகள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஆரஞ்சு, கொய்யா, பசலைக் கீரை, பாதாம், பூசணி விதை இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

என்ன தவிர்க்கலாம்?
வெள்ளை அரிசி, ரொட்டி, கிழங்கு வகைகள், வாழைப் பழம், அதிகக் கொழுப்பு உணவுகள் போன்றவற்றை கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.
சிகரெட் மற்றும் மதுவை அறவே விட்டொழிக்க வேண்டும்!

No comments:

Post a Comment