Monday, December 30, 2013

சில உடனடி எளிய இயற்கை உணவு தயாரிப்பு



''சமைக்கும்போது சூடுபடுத்துவதாலும், சில சுவையூட்டிகளைப் பயன்படுத்து வதாலும் உணவின் உண்மையான சத்துக்கள் நசிந்து போய்விடுகின்றன. . இதோ சில உடனடி எளிய இயற்கை உணவு தயாரிப்பு

பீட்ரூட் கீர்:

சிறிய பீட்ரூட் ஒன்றை சுத்தமாக்கி, தோல் அகற்றி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் ஜூஸ் எடுத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை மூடி தேங்காய்ப் பால் கலந்து, சுவைக்கு வெல்லம் மற்றும் ஏலம், முந்திரி சேர்த்துக் கொள்ளலாம். வழக்கமாக குழந்தைகளுக்கு வழங்கும் கீருக்குப் பதிலாக
இதைத் தரலாம்.

வாழைப்பூ சட்னி:

நரம்பு நீக்கி சுத்தம் செய்த வாழைப்பூவில் கைப்பிடி அளவை சிறுசிறு துண்டுகளாக்கி, சிறிதளவு பொட்டுக்கடலை, தேவையான அளவு தேங்காய் துருவல், பச்சை மிளகாய், தோல் நீக்கிய
இஞ்சி, உப்பு கலந்து அரைக்க... வாழைப்பூ சட்னி ரெடி. இதை இட்லி, தோசைக்கு சட்னியாகவோ, சாதத்துக்குத் துவையலாகவோ பயன்படுத்தலாம். ரத்தவிருத்தி மட்டுமல்ல... நாகரிகத்தின் பெயரில் குழந்தைகள் உண்ணும் ஃபாஸ்ட் ஃபுட் ரகங்களால் வரும் மலச்சிக்கலை போக்கவல்லது வாழைப்பூ.

முருங்கைக்கீரை சூப்:

கைப்பிடி அளவு முருங்கைக்கீரையுடன் நான்கு பல் பூண்டு, மிளகு, சீரகம், உப்பு, தோல் நீக்கிய இஞ்சி இவற்றை சேர்த்து, நசுக்கிக் கொதிக்க வைத்து, வடிகட்டி வழங்கினால்... அசத்தலான அயர்ன்
சக்திக்கான சூப் தயார்.

ரத்த சுத்திக்கான புதினா ஜூஸ்:

கைப்பிடி அளவு புதினா தழைகளை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிய சாறுடன், ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு பிழிந்து, சுவைக்கு நூறு கிராம் வெல்லம் சேர்த்து, சுமார் அரை லிட்டர் நீர் கலந்தால்... வளரிளம் பெண்களின் மாதப்போக்கினைச்
சீராக்கும் சுலபமான புதினா ஜூஸ் கிடைக்கும். பசியைத் தூண்டி சுறுசுறுப்பைத் தரும் என்பதோடு, சிறுநீர் தொடர்பான தடை மற்றும் எரிச்சலை இந்த ஜூஸ் குணமாக்கும்.

ரத்த விருத்திக்கான பழ சாலட்:

கொய்யாப்பழம், அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி அதில் பன்னீர் திராட்சை மற்றும் மாதுளம் முத்துக்களை சேர்த்து அப்படியே சாப்பிடத் தரலாம். மாலை வேளையில் ருசிக்கத் தோதான ஸ்நாக்ஸ் இது.

ரத்த விருத்திக்கான காய்கறி சாலட்:

கேரட், பீட்ரூட் காய்களை துண்டுகளாக்கி, சிறிதளவு வறுத்த மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு கலந்து கொத்தமல்லி, கறிவேப்பிலையை கலர்ஃபுல்லாக மேலே தூவினால், சுலபமாக நிமிடத்தில் காய்கறி சாலட் ரெடி.

கொத்தமல்லி ஜூஸ்:

ஒரு கைப்பிடி கொத்தமல்லியை அரைத்து வடிகட்டிய சாறுடன், ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு கலந்து, 100 கிராம் வெல்லம் சுவைக்குச் சேர்த்தால்... ரத்த அழுத்தத்தை சீராக்கி வளப்படுத்தும் கொத்தமல்லி ஜூஸ் தயார். சுலபமான ஜீரணத்துக்கு உதவுவதுடன், பசியைத் தூண்டவல்ல எளிய தயாரிப்பு இது.

வாழைப்பூ மடல் சூப்:

வாழைப்பூவின் இளம் மடல் ஒன்றை சிறுதுண்டுகளாக்கி, நான்கு பல் பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் ஒரு தக்காளி இவற்றை நசுக்கி, சிறிது மிளகு, சீரகம், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து
வடிகட்டினால்... ஹீமோகுளோபின் வளத்துக்கான வாழைப்பூ மடல் சூப்பை சுவைக்கலாம்.

சுவைக்காக சேர்க்கும் வெல்லம், பனை வெல்லமாக இருத்தல் நல்லது. மாற்றாக தேனும் சேர்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment